Monday, July 31, 2017

நீயே காதல்..

தான் யாரென்று அறியாது
காதலிக்கிறார்கள் இவர்கள்..

அது எவர் காதலென்று
அவர்களுக்கு எப்படித் தெரியும்?

இருத்தலில் இருக்கின்ற காதல்
இவர்களுக்கு எப்படி இயம்புவேன்?

உன் விரல் தீண்டும் போது
என் உயிரெல்லாம் உன்னுள் கலந்திருக்கும்..

என் காதலின் எல்லா ரகசியங்களும்
உன் மோனத்தின் ஊடே நீ பார்க்கலாம்..

உன் காதல் மட்டும்
எனக்கு போதும்..

மற்றெல்லாம் நீயே வைத்துக் கொள்...

என்னை பொறுத்த வரை
இருத்தலில் நீ மட்டுமே  அழகு..

Saturday, November 26, 2016

முட்டாள்களின் மொழி

முட்டாள்களின் மொழியை
இங்கு யார்
புரிந்து கொள்ள இயலும்?

மொழி போட்ட பாதை
வழியே தான்
காதல் நடந்து போக வேண்டுமென்றால்
அது முடமாகித் தான் போயிருக்கும்...

பார்ப்பதற்கு கண்ணென்றும்
முகர்வதற்கு மூக்கென்றும்
வைத்து விட்டால்
காட்சியின் வாசம் இங்கு
யார் காண இயலும்?

ஒன்றோடு ஒன்று
ஊடுருவி நின்ற நெறி தெரிந்து விட்டால்
நீயென்றும் நானென்றும் ஏது?

முட்டாள்களின் மொழியை
இங்கு யார்
புரிந்து கொள்ள இயலும்?




Monday, October 17, 2016

காதலே பிரமிப்பு!!!

வானத்தையும் மலையையும் கடலையும்
கண்டு பிரமிப்பது போல்
உன்னையும் கண்டு பிரமிக்கிறேன்....
இப்படி ஒரு காதலனா என்று???

நான் உணராத
என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும்
ரசித்து விளக்கும் பொழுது பிரமிக்கிறேன்....

எத்தனை முறை உள்வாங்கினாலும்
கரையை முத்தமிட துடிக்கும் அலையைப்  போல்
என்னை வந்தடைய துடிக்கும்
உன் துடிப்பை உணரும் போது பிரமிக்கிறேன்

சிவா!!!
கூட்டிக் கொண்டு போ!!!

Saturday, January 16, 2016

நான் கடவுள்

உன்னைப் பார்க்க வேண்டும் என்று
தவிப்பாய் இருக்கிறது எனக்கு!!

உன் பேச்சில் வழியும் அன்பு
எனக்கு மட்டுமே தெரியும்..

எத்தனை விழிகளுக்கு நடுவில் இருந்தாலும்
உன் கண்களை
என்னால் கண்டு கொள்ள முடியும்..,

நீ நடந்து சென்ற பாதைகள் எல்லாம்
உன் வாசம்
முகர்ந்து அறிந்து கொள்வேன் உயிரே!


ஒரு பாதம் வைத்து ஒரு பாதம் தூக்கி
நீ நடந்து போகையில்
பூமியும் வானமும் பூரித்த கணங்களுக்கு
நானே சாட்சி!!!


உதடு குவித்து,
ஒன்றையொன்று நனைத்து,
விரியும் பூவாய் விழும் வார்த்தைகளில்
என்னோடு சேர்ந்து
எங்கோ சில நட்சத்திரங்கள்
விழுந்து எழுந்திருக்கும்...


உன் இடையில் கை வைத்து
என்னோடு அணைக்கும் பொழுதுகளில்
எல்லா உயிரும் என் உயிரே!!!


உன்னோடு மோகித்து
உயிரோடு கலந்த பின்னும்
நீ 'இன்னும் வேண்டும்' எனும் போது
நான்
இறைவனாய்க் களித்திருப்பேன் என் அன்பே!!!

Thursday, December 24, 2015

தூது

நீயும் நானும் சேர்ந்திருந்த இரவுகளில்
விடியல் வரை விழித்து களித்திருப்பேன் .

நீயில்லாத இரவுகளில் தூக்கமும்
தழுவாமல் தனித்திருப்பேன் ...

எல்லா நாட்களிலும் நானும்
இரவும் மட்டுமே துணை.

நீ அவ்வப்போது மட்டுமே வருகின்றாய்...

என் உயிரே!  என் அன்பே!!!
நிலவின் ஒளியாய் உனை தழுவும்
என் எல்லா கவிதைகளும்...

காதலே!!!

இறைவனிடம் வேண்டுதற்கோ
உன்னிடம் காதலை சொல்வதற்கோ
நான் என்றுமே விரும்பியதேயில்லை!!!
நீயும், நானும், அதுவும் வேறோ???

Sunday, December 13, 2015

நீயும் நானும்...

உனக்குத்  தகுதியான பரிசு தர
எங்கெங்கு எல்லாம் தேடி தொலைந்திருக்கிறேன்
என்று தெரிய வாய்ப்பில்லை உனக்கு.

தங்கச் சுரங்கத்திற்கே தங்கம்
சமர்ப்பித்தல் சரியாமோ?

எந்த வண்ணங்கள் ஏந்திப் போனாலும்
இருளுக்கு ஏற்புடையதோ?

வாசத் தோட்டத்திற்கே பூக்கள்
படைத்தல் பொருந்துமோ?

சொல்ல முடியாத உன் அழகை
சுமந்து செல்ல எந்த மொழியில் எழுத்து இருக்கிறது?

உனக்குத் தகுதியாய் எதுவுமே
தோன்ற வில்லை எனக்கு.

என் இதயமும் உயிரும்
ஏற்கனவே தந்து விட்டேன்.
இப்போது அவையும் என்னிடம் இல்லை.

சூரியனாய் நீ பிரகாசிக்கையில்
தீபங்கள் கொண்டு வந்து
தேற்ற முடியாமல் அழுகின்றேன்.

என் அன்னையே!! கருவாச்சி...
இறுதியான தேடலில்
உனக்காய் ஒரு கண்ணாடி என் பரிசாய்..
எப்போது உன் முகம் தெரிந்து கொள்கிறதோ
அப்போது என்னை நினைவில் வைத்துக் கொள்.