ஓ, ஸ்பைடர்மேன்,
பிள்ளைப் பிராயத்திலிருந்தே
என் பிரியமான பிரமிப்பு நீ.
என் பால்யகாலப் பொழுதுகளின்
ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்
உன் தொலைக்காட்சி சாகசங்களுக்காய்
எதிர்பார்த்துக் காத்திருந்த
நாட்கள் ஏராளம்.
உன்னைப் போல் ஆவதெப்படி
என்று
உன்மத்தமாய் யோசித்த நாட்கள்
நிறையவே உண்டு.
உனக்கும் எனக்குமாய்
ஆறு முதல் அளப்பரிய வித்தியாசங்கள்
தேடித் தேடித்
அயர்ந்து போயிருக்கிறேன்.
விழுது பிடித்து ஆடும்போதெல்லாம்
விழுதின் உச்சி
வேறொரு மரம் பற்றிக்கொள்ளாதா என்று
விளையாட்டாய் யோசித்ததுண்டு.
சிலந்திப் பூச்சி பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சிலந்தி
உன்னைப் போல்
என்னையும் மாற்றாதா என்று
தொழுத நாட்கள் இங்கு
எழுத இயலாது.
என் யெளவன நாட்களில்
உன்னைப் போல் இருந்திருந்தால்
எத்தனை பெண்கள்
என்னைக் காதலித்திருக்ககூடும்
என்று ஏகாந்தமாய்
யோசித்த நிமிடங்கள்
நிறையவே உண்டு.
ஆனால் எப்போதும் தாமதமாய்
வரும் புரிதலைப் போல,
இந்த நடுத்தர வயதில் புரிகிறது.
நீயும் நானும்
ஒன்று தான் என்று.
"உண்மையில்
வாழ்க்கையின் மிகப்பெரிய
போராட்டங்கள்
நம்முள்ளேயே நிகழவேண்டியிருக்கிறது"
என்ற புரிதலில்
நீயும் நானும்
ஒன்று தான்.
Best one of urs..
ReplyDelete