Thursday, December 24, 2015

தூது

நீயும் நானும் சேர்ந்திருந்த இரவுகளில்
விடியல் வரை விழித்து களித்திருப்பேன் .

நீயில்லாத இரவுகளில் தூக்கமும்
தழுவாமல் தனித்திருப்பேன் ...

எல்லா நாட்களிலும் நானும்
இரவும் மட்டுமே துணை.

நீ அவ்வப்போது மட்டுமே வருகின்றாய்...

என் உயிரே!  என் அன்பே!!!
நிலவின் ஒளியாய் உனை தழுவும்
என் எல்லா கவிதைகளும்...

காதலே!!!

இறைவனிடம் வேண்டுதற்கோ
உன்னிடம் காதலை சொல்வதற்கோ
நான் என்றுமே விரும்பியதேயில்லை!!!
நீயும், நானும், அதுவும் வேறோ???

Sunday, December 13, 2015

நீயும் நானும்...

உனக்குத்  தகுதியான பரிசு தர
எங்கெங்கு எல்லாம் தேடி தொலைந்திருக்கிறேன்
என்று தெரிய வாய்ப்பில்லை உனக்கு.

தங்கச் சுரங்கத்திற்கே தங்கம்
சமர்ப்பித்தல் சரியாமோ?

எந்த வண்ணங்கள் ஏந்திப் போனாலும்
இருளுக்கு ஏற்புடையதோ?

வாசத் தோட்டத்திற்கே பூக்கள்
படைத்தல் பொருந்துமோ?

சொல்ல முடியாத உன் அழகை
சுமந்து செல்ல எந்த மொழியில் எழுத்து இருக்கிறது?

உனக்குத் தகுதியாய் எதுவுமே
தோன்ற வில்லை எனக்கு.

என் இதயமும் உயிரும்
ஏற்கனவே தந்து விட்டேன்.
இப்போது அவையும் என்னிடம் இல்லை.

சூரியனாய் நீ பிரகாசிக்கையில்
தீபங்கள் கொண்டு வந்து
தேற்ற முடியாமல் அழுகின்றேன்.

என் அன்னையே!! கருவாச்சி...
இறுதியான தேடலில்
உனக்காய் ஒரு கண்ணாடி என் பரிசாய்..
எப்போது உன் முகம் தெரிந்து கொள்கிறதோ
அப்போது என்னை நினைவில் வைத்துக் கொள்.




Thursday, August 27, 2015

தனிமையும் நரகமும்

என் நரகங்களை
உருவாக்கவும் அலங்கரிக்கவும்
எனக்கு நன்றாகவே
தெரிந்திருக்கிறது.

விழிகளின் எல்லைகளை விட்டு
நீ வெளியே போன பின்பு
வேலை ஆரம்பித்து விடுகிறது.

விழி மூடி பார்த்த இருளில்
நீயும் நானும் ஒன்றே
கருவாச்சி.

வெளிச்சம் ஒரு சித்ரவதை.
அது  உன்னையும் என்னையும்
வேறு என்கிறது.

உன்னை பிரிந்த கணங்கள் எல்லாம்
என் பிணத்தை நான்  இழுத்து  நடந்த கொடுமை,
பிரபஞ்சம் பார்த்த சாபம்,
கடவுளின் துயரம்,
கருணையில்லா காலம்,
கண்ணீரின் பருவம்!


அன்பே!
என் தராசுகளில் எடை போட்டால்
எதனையும் மிஞ்ச
உன் தலைமுடி ஒன்று போதும் எனக்கு.

இறைவா!
இறந்து போக முடியாத என்னை
எத்தனை முறை தூக்கிலிடுவாய்
இவளை வைத்து?

ஒன்றை இரண்டாக்கி...
உயிரை வேறாக்கி...
பார்வையில் குருடாக்கி...
என்னை பெண்ணாக்கி...
நீ காட்டும் முறுவல்கள் போதும் எனக்கு!

உனக்கும் சேர்த்தே
காதலிக்கிறேன் இவளை.
உதவிக்கரம் நீட்டு!

தனிமையும் நரகமும்

என் நரகங்களை
உருவாக்கவும் அலங்கரிக்கவும்
எனக்கு நன்றாகவே
தெரிந்திருக்கிறது.

விழிகளின் எல்லைகளை விட்டு
நீ வெளியே போன பின்பு
வேலை ஆரம்பித்து விடுகிறது.

விழி மூடி பார்த்த இருளில்
நீயும் நானும் ஒன்றே
கருவாச்சி.

வெளிச்சம் ஒரு சித்ரவதை.
அது  உன்னையும் என்னையும்
வேறு என்கிறது.

உன்னை பிரிந்த கணங்கள் எல்லாம்
என் பிணத்தை நான்  இழுத்து  நடந்த கொடுமை,
பிரபஞ்சம் பார்த்த சாபம்,
கடவுளின் துயரம்,
கருணையில்லா காலம்,
கண்ணீரின் பருவம்!


அன்பே!
என் தராசுகளில் எடை போட்டால்
எதனையும் மிஞ்ச
உன் தலைமுடி ஒன்று போதும் எனக்கு.

இறைவா!
இறந்து போக முடியாத என்னை
எத்தனை முறை தூக்கிலிடுவாய்
இவளை வைத்து?

ஒன்றை இரண்டாக்கி
உயிரை வேறாக்கி
பார்வையில் குருடாக்கி
என்னை பெண்ணாக்கி
நீ காட்டும் முறுவல்கள் போதும் எனக்கு!

உனக்கும் சேர்த்தே
காதலிக்கிறேன் இவளை.
உதவிக்கரம் நீட்டு!

Tuesday, June 9, 2015

தேடல்

போவதற்கு வேறு இடம் ஒன்றுமில்லை...
இங்கேயே, இப்பொழுதே வாழ்க்கை...
மீன் தொட்டியில் மீன்!

Friday, March 27, 2015

பெண் தெய்வம்

உனக்கும் எனக்குமாய்
இடைவெளி இருந்த பொழுதுகளில்
இங்கு எத்தனையோ உலகங்கள்
பிறந்து இறந்திருக்கும்.

உன் கழுத்துக் குழியில்
ஒரு தொட்டில் கட்டித் தந்திருந்தால்
யுகம் யுகமாய்த் தூங்கி இருந்திருப்பேன்
எழுந்திருக்க மனமின்றி!!

உன் விழிகளில் அப்படி என்ன இருக்கிறது?
எத்தனை முறை வேண்டுமானாலும்
விழுந்து தொலைந்து போக
எனக்கு சம்மதம்.

உனைத் தின்று
எனை நிரப்பும் முயற்சி எப்போதும் தோல்வியே!!
பாதி தின்ற பின்
உன் ஒரு பாதியும் என் ஒரு பாதியும்
இறந்து கிடக்கின்றன.

இரண்டு வானவில் பிடித்து
எல்லா நிறங்களும் களைந்து
உதடு சமைத்து
நீ ஒலி எழுப்புகையில்
என் எல்லா உலகங்களும்
அதனுள் ஒடுங்கி போகும்.

உன்னுள் நான் ஒளிந்திருப்பதை
நீ கண் மூடி கவனிக்கையில்
நீயுமற்று, நானுமற்று,
நடுவிலே ஏதுமற்று
போன இடம் உனக்குப் புரிந்திருந்தால்
வா இன்னுமொரு முறை கலவிக்கு!

உன் இருப்பு அறிந்த பின்,
உன் வெறுமை அறிந்த பின்,
நிலவின் முதுகு பார்க்கும் நிதர்சனம் அறிந்த பின்
நீயும் நானும் ஒன்றே என்றிரு
என் அன்பே!!!

Thursday, January 22, 2015

மௌன மொழி

காக்கையின் குரல்
எப்படிப் புரிந்து கொள்வது?
சொல்ல முடியாததை எப்படிச் சொல்வது?
எல்லா மொழிகளும் வீண்!!!

Thursday, January 8, 2015

நிரம்பாத நான்

தன் காதலால் தானே நிரம்பிய மனிதர்
யார் இருக்கிறார் இங்கு?

நான் பூக்களை காதலித்தபோது
முட்களின் கிரீடமே எனக்குக் கிடைத்தது.

ஆனந்த அலைகளில் விளையாட விரும்பிய போது
துயரப் புழுதியில் மட்டுமே துவண்டு தவித்திருந்தேன்.

காதலுக்காய் காதலில் விழுந்த போது
இருதயம் பார்க்க இவளுக்கும் தெரியவில்லை.

கிடைத்த ஆறுதல்களால் இருதயத்தின்
துயரம் இருமடங்காகிப் போனதே உண்மை.

ஒரு நட்பால் கிடைத்த கணத்தில்
இரண்டு நண்பர்கள் விலகிப் போனார்கள்.

ஒரு பைத்தியக் காரனோடு கை கோர்க்க
யாருக்கும் இங்கே நேரமில்லை.

என் நிழல் பார்த்து பயந்ததும்,
என் கண்ணீரின் இரைச்சலில் களைத்துப் போனதும்
என்னை நிரப்பும் முயற்சியின் எழுதாத உண்மைகள்.

இப்படித் தான் வாழ்வது வாழ்க்கை என்றால்
நான் இப்படியே வாழ்கிறேன்.

இனி கதறப் போவது இல்லை ஒருபோதும்.
உதடுகளை தைத்துவிட்டு
உருகும் கண்ணீரை குடித்திருப்பேன்.

இனி எந்த துயரமும்
எனை ஏமாற்ற முடியாது.
துயரங்களுக்காய் தர
இங்கு எதுவுமில்லை என்னிடம்.

தன் காதலால் தானே நிரம்பிய மனிதர்
யார் இருக்கிறார் இங்கு?